Monday, July 25, 2011

தெய்வத் திருமகள்-விக்ரம் வழக்கம்போல கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்

நடிகர்கள்: விக்ரம்,அனுஷ்கா,அமலா பால்,சந்தானம் மற்றும் பலர்
இசை    : ஜி.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு    : நிரவ் ஷா
இயக்கம்      : விஜய்
தயாரிப்பு   & வெளியீடு    : ஸ்ரீ ராஜகாளியம்மன் மீடியாஸ் & யுடிவி

 
ம வயதுடையவர்களாக அப்பாவும் மகளும் இருந்தால் எப்படி இருக்கும் என்ற புதுமையான கற்பனையைக் காட்சிகளாக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய்!
ஊட்டியில் சாக்லெட் ஃபேக்டரியில் வேலையில் இருக்கும் விக்ரமுக்கு அறிவுத் திறன் ஆறு வயதுக்கு மேல் வளரவில்லை. அவருக்குக் கல்யாணமாகி குழந்தை பிறக்கும்போது மனைவி இறந்துவிட மகளை அன்போடும் பாசத்தோடும் வளர்க்கிறார். பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறார். அங்கு வரும் தாளாளர் அமலா பால் குழந்தையோடு பழக, அவளுடைய அம்மாதான் காதலனோடு ஓடி வந்துவிட்ட தன் அக்கா என்று தெரியவருகிறது. அப்பாவுக்குச் சொல்ல, அவர் வந்து விக்ரமையும் குழந்தையையும் சென்னைக்கு அழைத்து வருகிறார். சென்னை புறநகரில் விக்ரமை இறக்கிவிட்டுவிட்டு குழந்தையோடு போய்விடுகிறார்.
 
விக்ரம் தட்டுத் தடுமாறி வழக்கறிஞர் அனுஷ்காவிடம் வந்து சேர, அனுஷ்கா கோர்ட்டுக்குப் போகிறார். கோர்ட் என்ன சொல்கிறது என்பதுதான் மீதிக் கதை!
விக்ரம் வழக்கம்போல கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். காலை அகட்டி வைத்து ஓடும்போதாகட்டும், வாய்க்குள் நாக்கைச் சுழற்றிச் சுழற்றி பேசும்போதாகட்டும், மகளுக்காக ஏங்கித் தவிக்கும்போதாகட்டும் பரிதாபத்தை அள்ளுக்கிறார். ஆனால், கொஞ்சம் ஓவராக நடிக்கிறாரோ என்ற எண்ணம் ஆரம்பத்தில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக படத்துக்குள் நுழைந்து செட்டில் ஆன பிறகு உறுத்தல் இல்லாத நடிப்பு!

கொஞ்சம் அசட்டு வக்கீலாக வரும் அனுஷ்காவுக்கு நல்ல ஸ்கோர் பண்ணும் வாய்ப்பு.நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். தலைமுதல் கால் வரையில் மூடிய உடைகளுடன் அவரைப் பார்க்கும்போதும் அழகாகத்தான் இருக்கிறார்.
 
அமலா பால் அழகான கண்கள்... பெரிதாக ஸ்கோப் இல்லை. பள்ளித் தாளாளராக வரும் காட்சிகளில் கொஞ்சம் கவர்கிறார்.

வழக்கமாக ஹீரோவுடன் ஒட்டிக் கொண்டு காமடி செய்யும் சந்தானத்துக்கு இதில்
அனுஷ்காவுடன் அலையும் வேலை. ஆனால், அதே சுவாரஸ்யத்தை இதிலும் காட்டியிருக்கிறார்.

படத்தின் திருமகள் சுட்டிப் பெண் சாராதான்! பாதி வசனங்களைக் கண்களிலேயே பேசிவிடுகிறார். க்ளைமாக்ஸை நெகிழ்ச்சியூட்டுவதாக்குவது அவருடைய பாவனைகள்தான்!

இயக்குனருக்கு இருபுறமும் நின்று படத்துக்குக் கை கொடுத்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரும்!
வித்தியாசமான கதைக் களத்தை (ஹாலிவுட்டின் ஐ ஆம் சாம் படத்தில் இருந்து) ‘எடுத்து’க் கொண்டதற்காக இயக்குனர் விஜயைப் பாராட்டலாம்.  ஆனால், இப்படிப்பட்ட வித்தியாசமான மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களைச் சொல்லாமல் எல்லா சராசரிகளையும் போல அவனும் வேலை பார்க்கிறான், மனைவியோடு குடித்தனம் நடத்தி குழந்தை பெறுகிறான், குழந்தையை பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறான் என்று கொண்டு போயிருப்பது ஏன்? தயவு செய்து மக்களுக்குப் புரியாது என்ற சப்பைக்கட்டு தேவையில்லை. அந்த மூளை வளர்ச்சி குறைவு மனிதர்களின் சிரமங்கள் பதிவாகாமல் போனது குறைதான்.

அதேபோல இப்படி ஒரு கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு மனைவியோடு சம்பந்தப்படுத்தி எம்.எஸ்.பாஸ்கர் சந்தேகப்படுவது, சக ஊழியர் போட்டுக் கொடுப்பது எல்லாம் சீப் டேஸ்ட்!

அனுஷ்காவுக்கு எதிராக வாதாடும் வக்கீலாக வரும் நாசருக்கு பெரிய வக்கீல் என்று ஏக பில்ட் அப் கொடுக்கிறார்கள். ஆனால், அசட்டுத்தனமான மன வளர்ச்சி குன்றியவர்களை சாட்சிகளாகக் கொண்டு வந்து நிறுத்துகிறார். அது செல்லாது என்று அனுஷ்கா சொன்னதும் ஒப்புக்கொண்டு விடுகிறார். என்ன சார்..! கோர்ட் காட்சிகள் ரொம்பவே நீளம்... அப்பாவும் குழந்தையும் இல்லாமல் வேறு ஆட்கள் கதை சொல்வதால் இன்னும் நீளமாகத் தோன்றுகிறது.

விக்ரமின் நடிப்பும் நெகிழ்ச்சியான க்ளைமாக்ஸும் இத்தனை குறைகளையும் மறக்கடித்துவிடுகிறது. அந்த வகையில் தெய்வத் திருமகள் திருமகள்தான்!

No comments:

Post a Comment

welcomeee