Saturday, September 24, 2011

ஆயிரம் விளக்கு-மதுரை, ரவுடி, போலீஸ், என்கவுண்டர் என்ற மசாலாக்களோடு வந்திருக்கும் மற்றொரு படம்!


நடிகர்கள்     : ஷாந்தனு பாக்கியராஜ், சானாக்கான், சத்தியராஜ், கஞ்சா கருப்பு,         மற்றும் பலர்
இசை             : ஸ்ரீகாந்த் தேவா
இயக்கம்      : எஸ்.பி.ஹோசிமின்
தயாரிப்பு     : எச்.எம்.ஐ .பிக்ச்சர்ஸ்
 
மதுரை, ரவுடி, போலீஸ், என்கவுண்டர் என்ற மசாலாக்களோடு வந்திருக்கும் மற்றொரு படம்!


துரையில் வாழும் ரவுடி சத்யராஜ் மக்களுக்கு முகம் காட்டாத மனிதராக வாழ்ந்துவருகிறார். அவரை என்கவுண்டரில் போடச் சொல்லி போலீஸ் டீம் வலியுறுத்த கமிஷனர் அனுமதி மறுக்கிறார். கூடவே மூன்று மாதங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கிறார். இந்த மூன்று மாத இடைவெளியில் சத்யராஜ் தன் கனவு புராஜெக்ட்டான மில் கட்டும் வேலையைத் தொடங்க, அதற்கான இடத்தில் உள்ள வீடுகளை விலைகொடுத்து வாங்குகிறார்கள் அவருடைய ஆட்கள். இதில் ஒருவர் மட்டும் விலைக்குத் தரமாட்டேன் என்கிறார். அந்த ஒருவர்தான் சாந்தனு.

இந்த டீலிங்கின்போது சாந்தனு ஏதோ சத்யராஜின் ரைட் ஹேண்ட் என்பதுபோன்ற தோற்றம் மற்றவர்களுக்கு வந்துவிட, சாந்தனு அதை மெயிண்டெய்ன் பண்ணுகிறார். இன்னொருபக்கம் சாந்தனுவின் நற்குணங்களைப் பார்க்கும் சத்யராஜ் அவர்மீது பாசமாகி கண்ணாயிரம் என்ற பெயரில் அவரோடு பழகுகிறார். இப்படிப் போகும் கதையில் நடுவே சாந்தனுவுக்கும் சனாகானுக்கும் இடையே காதல்! சத்யராஜ் யார் என்ற உண்மை சாந்தனுவுக்கு தெரிந்ததா... சத்யராஜ் ரவுடியிசத்தைவிட்டு வெளியே வந்தாரா என்பதெல்லாம்தான் ஆயிரம் விளக்கு!

பழகிப் போன கதை என்பதுகூடப் பரவாயில்லை... பழகிய பாதையிலேயே பயணிக்கிறது என்பதுதான் அலுப்பாக இருக்கிறது.

சத்யராஜ் தன் இயல்பான தோற்றத்தில் வருகிறார். ஆரம்ப சண்டையின் ஆக்ரோஷத்திலும் அடுத்து வரும் காட்சிகளில் சாந்தனுவிடம் பணிவு காட்டும்போதும் அனுபவம் பேசுகிறது.

சாந்தனுவுக்கு முகபாவங்கள் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. உடல் மொழியிலும் கொஞ்சம் கடினமாகத்தான் தோன்றுகிறார். கொஞ்சம் உடம்பைக் குறைத்து முகபாவங்களை ஏற்றினால் நன்றாக இருக்கும்.

சாந்தனு படத்தில் அடிக்கும் கமெண்ட் போலத்தான் சனாகான் ஜப்பான் மூக்கும் சைனா முழியுமாக வருகிறார். பெரிதாக இம்ப்ரஸ் பண்ணவில்லை.

பாடல்கள் ஸ்ரீகாந்த் தேவா! வழக்கமான பாணியில் வந்து போகிறது.

இயக்குனர் ஹோசிமின் ஷங்கரின் தயாரிப்பு. ஆனால், அவரிடமிருக்கும் சின்னச் சின்ன சர்ப்ரைஸ்களை இவரிடம் காணவில்லை.

அடுத்த முறையாவது அதை எதிர்பார்க்கலாமா சார்?!

Monday, September 19, 2011

எங்கேயும் எப்போதும்..!தினசரி செய்தித்தாளில் பார்த்துப் பழகிப் போன செய்திதான் படத்தின் ஒருவரிக் கதை!


தினசரி செய்தித்தாளில் பார்த்துப் பழகிப் போன செய்திதான் படத்தின் ஒருவரிக் கதை! எதிர் எதிர் திசைகளில் பயணிக்கும் இரு பேருந்துகள் நேருக்கு நேராக மோதிக் கொள்ளும் விபத்தும் அதன் விளைவுகளும்தான் கதை! ஆனால், இனி விபத்து செய்திகளைப் படித்தால் உடனே தாண்டிச் செல்ல முடியாத அளவுக்கு பாதிப்பை உண்டாக்கியிருப்பதுதான் இந்தப் படத்தின் முக்கியமான அம்சம்!

தினமும் நாம் பார்க்கும் முகங்கள்தான்... ஊடலுக்குப் பின் சமாதானமாகி ஊருக்குச் செல்லும் காதல் ஜோடி, காதலியைத் தேடி வந்துவிட்டு ஊர் திரும்பும் காதலன் ஆகிய மூவரும் ஒரு பஸ்ஸில் திருச்சியில் இருந்து புறப்படுகிறார்கள். இன்னொருபக்கம் காதலனை எதிர்பார்த்துக் காத்திருந்துவிட்டு சென்னையில் இருந்து பஸ் ஏறுகிறாள் ஒரு காதலி. இந்த இரண்டு பஸ்களும் விழுப்புரத்தைத் தாண்டி மோதிக் கொள்கின்றன. காதல் ஜோடி என்ன ஆனது..? காதலன், காதலி சந்தித்தார்களா என்பதுதான் கதை!
முதல் காட்சியிலேயே மோதலைக் காட்டிவிட்டு, ஆறு மாதங்களுக்கு முன் என்று பின் கதைக்குச் சொல்கிறார் இயக்குனர். அதில் திருச்சியில் இருந்து சென்னைக்கு வரும் அனன்யா சூழல் காரணமாக சரவ்வுடன் பயணிக்க வேண்டிய நிலையும் அந்த இருவருக்குள்ளும் ஏற்படும் ரசாயன மாற்றங்களும் காட்சிகளாக விரிகின்றன. நிகழ்காலத்துக்கு வரும்போது சரவ் திருச்சியில் இருந்தும் அனன்யா சென்னையில் இருந்தும் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.

இன்னொருபக்கம்  ஜெய் அஞ்சலி ஜோடி திருச்சியில் இருந்து பஸ் ஏறுகிறார்கள். அவர்களின் பின் கதையில் ஜெய் அப்பாவித்தனமாகவும் அஞ்சலி துடுக்கான துணிச்சலான பெண்ணாகவும் இருப்பது கதையின் சுவையைக் கூட்டுகிறது. அவர்களுக்குள் அறிமுகம் ஏற்படுவது, பல சோதனைகளைக் கடந்து ஜெய் காதலை அஞ்சலி ஏற்பது, அம்மாவிடம் அறிமுகம் செய்ய அழைத்துச் செல்வது என்று பயணிக்கிறது கதை.

இதற்கு நடுவே பிரியமான கணவன் மனைவி, வெளிநாட்டில் வேலை பார்த்து மகளை முதன்முதலாகப் பார்க்கச் செல்லும் தகப்பன், கண்களால் பேசி, கலந்து மொபைல் எண்களைப் பறிமாறிக் கொள்ளும் அளவுக்கு வளரும் பயணக் காதல் ஜோடி, வெற்றிக் கோப்பையோடு வரும் பெண் பிள்ளைகள் என்று பல முகங்கள் நான் பார்த்த ஆனால், மனதில் பதிய மறுத்தவை. இனி, அழுத்தமாகப் பதியும் அளவுக்கு மனதுக்கு நெருக்கமாக்கி இருக்கிறார் புதிய இயக்குனர் சரவணன்.

அவருக்கு  முழு பலமாக இருப்பவர் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். அவர் காட்டும் கோணங்களும் அசைவுகளுமே ஆயிரம் கதைகளைச் சொல்கிறன. அதற்கு பக்கபலமாகப் பயணிக்கிறது இசை. புதியவர் சத்யா, பாடல்களிலும் பின்னணியிலும் முன்னணிக்கு வந்திருக்கிறார்.

ஜெய், அஞ்சலி, அனன்யா புதுமுகம் சரவ் ஆகிய நால்வருமே கொஞ்சமும் மிகையில்லாமல் நடித்திருக்கிறார்கள். அதிலும் ஜெய் அஞ்சலி ஜோடி கலகலப்பு என்றால் சரவ் அனன்யா ஜோடி ஆழ்ந்த அமைதி!

கனமான க்ளைமாக்ஸ் என்றாலும் அதுவரையில் கலகலப்பாக நகர்த்திச் செல்லும் திரைக்கதை படத்துக்கு மிகப் பெரிய பலம். அதேபோல, பல இடங்களில் பளிச்சென்று இருக்கிறது வசனம். தமிழ் சினிமாவுக்கு  நல்ல வரவாகச் சொல்லலாம் சரவணனை!
படத்தின் மைனஸாகச் சொல்வதாக இருந்தால் திரும்பத் திரும்ப வரும் சில காட்சிகளைச் சொல்லலாம்.
ஆசை மனைவியைப் பிரிய மனமில்லாமல் அவருடனே பயணிக்கும் கணவன் பஸ்ஸை விட்டு இறங்குவதும் மீண்டும் ஏறுவதும் அடிக்கடி வருவது கொஞ்சம் அலுப்பு. அதேபோல ஜெய் அஞ்சலி காட்சிகளின் நீளம்... சுவாரஸ்யம் என்றாலும் கதை நகராமல் இருப்பதால் கொஞ்சம் சலிப்பு வருகிறது.

மற்றபடி எங்கேயும் எப்போதும் நடக்கும் விபத்துதான் என்றாலும் தமிழ் சினிமாவில் இந்த விபத்து அடிக்கடி நடக்க வேண்டும்!

Tuesday, September 6, 2011

மங்காத்தா... இரண்டாவது பாதி உள்ளே... முதல் பாதி வெளியே..!


ஜீத் நடிக்கும் 50 வது படம்! பூஜையில் இருந்தே நெகட்டிவ் ரோல் என்ற அறிவிப்போடுதான் படம் ரெடியானது என்பதால் எந்த அளவு நெகட்டிவ் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டிய படம்!

ஆனால், ஒரு துளிகூட கருணையோ இரக்கமோ இல்லாத பணம் மட்டுமே ஆசையாக அலையும் ஒரு பேராசைக்காரனின் பாத்திரம் ரொம்பவே புதிதாக இருக்கிறது. மாஸ் ஹீரோவான ஒருவர் இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஏற்று அதில் கொஞ்சமும் பின் வாங்காமல் நடித்திருப்பது நிச்சயம் பாராட்டுக்குரிய விஷயம்தான்!

ஐ.பி.எல். போட்டியின் ஃபைனல் போட்டிக்காக நடத்தப்படும் சூதாட்டத்துக்காக ஒரு கிளப்புக்குக் கொண்டுவரப்படும் 500 கோடி ரூபாயை நடுவில் அடித்துக்கொண்டு போக திட்டமிடும் ஐவர் குழுவின் அட்டகாசம் ஒருபக்கம்... இந்த சூதாட்டத்தைக் கண்டுபிடிக்க ஊர் ஊராகப் போராடும் போலீஸ் அதிகாரி அர்ஜூன் இன்னொரு பக்கம்...

இந்த உள்ளே வெளியே மங்காத்தாவில் யாருக்கு வெற்றி என்பதுதான் மங்காத்தா!
க்ரே தலைமுடி... நாலுநாள் தாடி... சதா புகையும் சிகரெட்... எந்நேரமும் குடித்துக் கொண்டே இருப்பது என்று முழு வில்லன்! அதிலும் பணத்துக்காக எதையும் செய்யும் ஆள். த்ரிஷாவைக் காதலிப்பது, நண்பர்களோடு கூத்தடிப்பது என்று எல்லாவற்றிலும் சுயநலம் கடைவாயோரம் ஒழுகிக் கொண்டே இருக்கிறது. இன்னும் ஒருபடி மேலே போய் அடியாளிடம் கன்னத்தில் பளாரென்று அடி வாங்குவது, அர்ஜூனை ஆக்‌ஷன் கிங் என்று பாராட்டுவது, பிரேமுடன் சரிக்கு சரி காமெடி செய்வது, பணத்தைக் கோட்டைவிட்டு விட்டு திருதிருவென்று விழிப்பது என்று ஹீரோயிசத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நடித்திருக்கிறார். அதேபோல வீண் புகழ்ச்சியும் இல்லை! வெல்டன்!

நாயகிகளில் த்ரிஷா, லட்சுமி ராய், அஞ்சலி, ஆண்ட்ரியா என்று எல்லோருக்குமே ஊறுகாய் ரோல்தான். ஆனாலும் சரியான இடத்தில் சரியான அளவில் வந்து போகிறார்கள்.

அர்ஜூன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருக்கிறார். ஆனாலும் க்ளைமாக்ஸ் திருப்பம் நிச்சயம் எதிர்பாராத அதிரடிதான்!

பிரேம்ஜி, வைபவ், சுப்பு, ஜெயபிரகாஷ் என்று ஏகப்பட்ட நடிகர்கள்... எல்லோரையும் ஒன்றாக அறிமுகப்படுத்தி அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார். அந்த வகையில் பாராட்டலாம்.
யுவன் பாடல்களில் ராஜ வாசனை..! ஆனாலும் ரசிக்கும்படியாக இருக்கிறது.
சக்தியின் ஒளிப்பதிவு, எடிட்டிங் இரண்டுமே வழக்கம் போல அசத்தல்!

எழுதி இயக்கியிருக்கும் வெங்கட் பிரபு சூதாட்டத்தின் பொருளாதாரத்தையோ அந்த உலகத்து நடவடிக்கைகளையோ கொஞ்சமும் கவலைப்படாமல் அதில் கிடைக்கும் பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு கதை பண்ணியிருக்கிறார். முதல் பாதியில் இலக்கின்றி அலையும் கதை இரண்டாவது பாதியில் வேகம் எடுக்கிறது.

மங்காத்தா... இரண்டாவது பாதி உள்ளே... முதல் பாதி வெளியே..!