Tuesday, August 30, 2011

யுவன் யுவதி சந்தானத்தைக் கொண்டு வந்ததால் நாம் பிழைத்தோம்!


ட்டாய கல்யாணத்தில் இருந்து தப்பிக்க அமெரிக்கா செல்ல நினைக்கும் யுவனும் காதலித்தவனைக் கல்யாணம் செய்துகொள்ள அமெரிக்கா செல்ல நினைக்கும் யுவதியும் அமெரிக்க தூதரக வாசலில் சந்தித்துக் கொண்டால் எப்படியிருக்கும்? என்ற எஸ்.ராமகிருஷ்ணனின் (கதை வசனம்) சுவாரஸ்யமான கற்பனைதான் கதை! ஆனால், இதைச் சொன்ன விதத்தில் அத்தனை அசமஞ்சம்!

உசிலம்பட்டிக்காரனான பரத் ஊரையே வெறுக்கிறார். காரணம் அவங்க காட்டுமிராண்டிப் பய கூட்டம் என்பதுதான். அதனால் அவர் அமெரிக்காவுக்கு எஸ்கேப் ஆக நினைக்கிறார். அதற்கான முயற்சியில் இருக்கும்போது ரீமா கலிங்களைச் சந்திக்கிறார். அவரும் அமெரிக்கா செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்க வந்தவர். பாஸ்போர்ட் தொலைந்து போக, விசா மறுக்கப்படுகிறது. வரிசையில் நிற்கும்போதே சண்டையிட்ட இருவரும் மேலும் முறைத்துக் கொள்கிறார்கள். ஆனால், பரத் ரீமா மீது காதல் வசப்படுகிறார். பாஸ்போர்ட் வாங்க ரீமா ஏதேதோ கோமாளித்தனங்களைச் செய்கிறார். கடைசியில் போலீஸில் புகார் செய்ய, அங்கே வரும் பரத் தான் உதவுவதாகச் சொல்ல இருவரும் ஒன்றாகச் சுற்றுகிறார்கள்.
நடுவே பரத்தின் அப்பா சம்பத், பரத்துக்கு நீதிபதியின் மகளை பார்த்து  பேசிமுடிக்க பரத், அமெரிக்கா செல்ல திட்டமிடுகிறார். ஆனால், வலுக்கட்டாயமாக அவரை உசிலம்பட்டிக்கு அழைத்துச் செல்லும் சம்பத், தன் மகனின் காதலி என்று நினைத்து ரீமாவையும் அடைத்து வைக்கிறார். பரத் அதைக் கேட்டு ஓடிச் சென்று ரீமாவை மீட்க, அவரோ பரத் மீது கோபத்தை வீசிவிட்டுச் சென்றுவிடுகிறார். (ஹலோ... இங்கே இடைவேளைதான்... அதுக்குள்ளே டயர்ட் ஆகிட்டா எப்படி?)

பத்து மாத இடைவெளிக்குப் பிறகு சம்பத் தன் மகனைத் தேடிக் கொண்டிருக்க செஷல்ஸ் தீவில் செட்டில் ஆகியிருக்கிறார் பரத். அங்கே திரும்பவும் ரீமாவைச் சந்திக்க நேரிடுகிறது. மறுபடியும் காதலைப் புதிப்பித்து உசிலம்பட்டிக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொள்கிறார்.

சுவாரஸ்யமான முடிச்சை ஜவ்வு இழுவை இழுத்து நம்மைச் சோதித்து விடுகிறார் படத்தின் இயக்குனர் குமரவேல். காட்சிகளில் எந்தப் புதுமையும் இல்லாமல் பரபரப்பும் இல்லாமல் சவசவ என்று நகருகிற கதையில் பரத்தின் நண்பனாக வரும் சந்தானம்தான் ஒரே ஆறுதல்! நல்லவேளையாக இடைவேளைக்குப் பிறகு செஷல்ஸ் தீவுக்கும் சந்தானத்தைக் கொண்டு வந்ததால் நாம் பிழைத்தோம்!

பரத் ரொம்ப மெனக்கெடாமல் வந்து போகிறார். இந்த படத்துக்கு இவ்வலவு போதும் என்று நினைத்துவிட்டாரோ என்று எண்ணும் அளவுக்கு மிக மெத்தனமான நடிப்பு. பாடல் காட்சிகளில் நடனம் ஆடும்போது மட்டும் கொஞ்சம் உற்சாகம் தெரிகிறது.ரீமா கலிங்கள் இந்தப் படத்துக்கு கொஞ்சமும் பொருந்தாத சாய்ஸ். பல நேரங்களில் பரத்துக்கு சீனியராகத் தோற்றம் தருகிறார். 

படத்தின் பெரிய ரிலீஃப் சந்தானம்தான். அதிலும் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் அடிக்குரலில் கத்தாமல் இருப்பது பெரிய ஆறுதல். என்னதான் சச்சின் டெண்டுல்கர் கொச்சினில் வந்து செட்டில் ஆனாலும் அவரை யாரும் கொச்சின் டெண்டுல்கர்னு கூப்பிட மாட்டாங்க என்கிற ரேஞ்சில் அவர் அடிக்கும் பஞ்ச்சுக்கு தியேட்டர் நாற்காலிகளே சிரிக்கின்றன.

இசை விஜய் ஆண்டனி. இரைச்சல்தான் அதிகமாக இருக்கிறது பின்னணி இசையில்! பாடல்களில் மறக்காமல் இருப்பதால் கொஞ்சம் மனதில் நிற்கும் மெலடி!திரைக்கதையில் பெரிய பெரிய ஓட்டைகள் இருப்பதால் படம் ஒட்டவே இல்லை. குமரவேல் சார்... ஸாரி... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

Friday, August 19, 2011

ரௌத்திரம்-பழகு என்ற தாத்தாவின் வார்த்தைகளை கடைசிவரை கடைபிடிக்கும் நாயகனின் கதை.


ரௌத்திரம் பழகு என்ற தாத்தாவின் வார்த்தைகளை கடைசிவரை கடைபிடிக்கும் நாயகனின் கதை. ஆனால், காலத்துக்கு ஏற்பவும் இடத்துக்கு ஏற்பவும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் போனால் ரௌத்திரம் ரவுடித்தனமாகிவிடும் என்பதைச் சொல்லாமல் விடுவதால் கதையில் ஈர்ப்பு குறைவாக இருக்கிறது.

அடிதடி நாயகனாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஆசைப்பட்டிருக்கும் ஜீவாவுக்கு கோ படத்துக்குப் பிறகு வந்திருக்கும் படம். குறும்பு கொப்பளிக்கும் நாயகனாக பல படங்
களில் வலம்வந்த ஜீவா இந்தப் படத்தில் அதிக வசனங்கள் பேசாமல் அடக்கி வாசித்திருக்கிறார். அநியாயத்தைக் கண்ட இடத்தில் தட்டிக் கேட்கும் கேரக்டர். அதனால், குடும்பத்துக்கு சிக்கல் என்று வரும்போது வீட்டை விட்டு வெளியேறுகிறார். அந்த இடத்தில் அவருடைய நடிப்பில் அபாரமான அழுத்தம்! ஆனால், க்ளைமாக்ஸில் வெறுமனே வேடிக்கை பார்க்கும் நபராக மாறிப் போனதால் அதுவரையில்  செய்த அத்தனையும் அடிபட்டுப் போகிறது. நடிப்பென்றால் நிச்சயம் ஜீவாவுக்கு வித்தியாசமான படம்தான்!

படத்தில் கவரும் இன்னொரு கதாபாத்திரம் ஜீவாவின் அப்பாவாக வரும் ஜெயபிரகாஷ். அப்பாவின் பெயர் வைத்திருப்பதால் ஜீவாவை பெயர் சொல்லி அழைக்காமல் அவர் இவர் என்று மரியாதையாக அழைப்பதும் முகம் பார்த்துகூட பேசாமல் அப்பாவுக்கு உரிய மரியாதையை மகனுக்குக் கொடுப்பதும், ஜீவா சென்ற பிறகு அங்கலாய்ப்பதும் அசத்தல்!
கொஞ்சநேரமே வந்தாலும் ஜீவாவின் தாத்தாவாக வரும் பிரகாஷ் ராஜ் கேரக்டரைப் போலவே கம்பீரம்!

படத்தின் மிகப் பெரிய பலவீனம் திரைக்கதை! இடைவேளை வரையில் கௌரி... கௌரி என்று பில்ட் அப் கொடுத்துவிட்டு இடைவேளையின் போது அவரைக் காட்டுகிறார்கள். மெலிந்த தேகமும் நோஞ்சான் தோற்றமுமாக இருக்கும் சென்றாயந்தான் வில்லன் என்னும்போது சப்பென்று ஆகிவிடுகிறது. ஆள்தான் அப்படி என்றால் ஜீவாவிடம் சும்மா சும்மா அடிவாங்கிக் கொண்டே இருக்கிறார். கடைசியில் யார் கையிலோ அடிபட்டு செத்துப் போகிறார். மிக பலவீனமான கேரக்டரைசேஷன்... ஆனால், சின்னச் சின்ன முக பாவனைகளில் சென்றாயன் அசத்துகிறார். கதாபாத்திரம் வலுவாக இருந்திருந்தால் நிச்சயம் தூக்கி சுமந்திருப்பார் என்று நம்ப வைக்கும் நடிப்பு. அது சரியில்லாததால் வீணாகிவிட்டது!

மனதில் நிற்காத இசை! பின்னணியிலும் ஈர்க்கவில்லை.

இயக்குனருக்கு இது முதல் படம்... சின்னச் சின்ன விஷயங்களுக்கு கூட மிக நுணுக்கமான டீடெய்ல் செய்து காட்சிகளைச் சுவையாகப் படைத்திருக்கிறார். ஆனால், கோர்வையாக இல்லாததால் சுவை முழுமையாகக் கிடைக்கவில்லை. நல்ல இயக்குனராக வருவார் என்பதற்கான அடையாளங்கள் தெரிகின்றன. அடுத்தப் படத்தில் அதை எதிர்பார்ப்போம்!

Monday, August 8, 2011

போட்டா போட்டி-ஒரு அதிரிபுதிரி எண்டர்டெயினரைக் கொடுத்திருக்கிறது போட்டா போட்டி படக்குழு!

நடிகர்கள்: சடகோப்பன் ரமேஷ், அரிணி மற்றும் பலர்
இசை    : அருள் தேவ்
ஒளிப்பதிவு    : கோபி அமர்னாத்
இயக்கம்      : யுவ்ராஜ்
தயாரிப்பு   & வெளியீடு    : எ.வி.ஆர் டாக்கீஸ்/ஃபிலிக்கர் ஸ்டுடியோதையென்று ஏதும் தேவையில்லை... லாஜிக்கெல்லாம் பார்க்க வேண்டாம்... கலகலப்பாக இருந்தால் போதும் என்ற மனநிலையில் உட்கார்ந்தால் உற்சாகமாக வெளியே வரலாம். அப்படி ஒரு அதிரிபுதிரி எண்டர்டெயினரைக் கொடுத்திருக்கிறது போட்டா போட்டி படக்குழு!

பக்காவான பட்டிக்காட்டில் படித்த ஒரே பெண்ணாக இருக்கும் ரஞ்சிதத்தைக் கட்டிக்கொள்ள முறைமாமன்கள் இருவர் போட்டி போடுகிறார்கள். அதில் ஒருவருக்கு ரஞ்சிதத்தின் மீது காதல்... இன்னொருவருக்கு ரஞ்சிதம் அப்பா சேர்த்து வைத்திருக்கும் சொத்து மீது காதல்! ரேக்ளா ரேஸ், சேவல் சண்டை, ஜல்லிக்கட்டு என்று ஆளாளுக்கு ஒரு போட்டியைச் சொல்ல ஒரு பொடியன் கிரிக்கெட் வையுங்கப்பா... என்கிறான். ரஞ்சிதமும் அதை ஆமோதிக்க, இருவரும் அணி சேர்த்து கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இதில் ஒரு அணிக்கு பயிற்சியாளராக வரும் சடகோபன் ரமேஷும் ரஞ்சிதமும் லவ்வுகிறார்கள். முடிவு என்ன என்பதை நீங்களே யூகித்து விடலாம். ஆனாலும் யூகிக்காத பல சர்ப்ரைஸ்களைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் யுவராஜ்.

ஆர்.பார்த்திபனின் குரலில் (குரல் மட்டும்தான்!) அறிமுகமாகும் கிராமமும் அதன் மைனரும் ஆரம்பத்திலேயே இது ஜாலி களம் என்பதைச் சொல்லிவிடுகிறது. அதையடுத்து அடுக்கப்பட்டுக் கொண்டே போகும் காட்சிகளில் கதை நகராவிட்டாலும் கலகலப்பு இருக்கிறது. அதிலும் ஊசிப்பட்டாசாக வந்து விழும் வசனங்கள்தான் படத்தின் மிகப்பெரிய பலம். அதனாலேயே சடகோபன் ரமேஷ் தொடங்கி சைடில் நிற்கும் ஆர்டிஸ்ட் வரையில் யாருமே நடிக்காமல் வந்து நின்று வசனம் பேசுவது உறுத்தாமல் போகிறது. அந்த வகையில் இது முழுக்க முழுக்க இயக்குனரின் படம்!

கிரிக்கெட் என்றாலே என்னவென்று தெரியாமல் அது எப்படிப்பட்ட ஆட்டம்டா என்று கேட்கும் மைனர் அடுத்தக்கணமே பயிற்சியளிக்க யாரைப் போடலாம் என்று கேட்டுவிட்டு, ‘ஏண்டா... இந்த சச்சின் என்ன பண்றான் இப்போ?’ என்பது லாஜிக்கை மீறிய சரவெடி! இதுபோல படம் நெடுக நிறைய இருக்கின்றன. அதிலும் முட்டாள் மைனரும் அவருக்கேற்ற மங்குணிப் பாண்டி எடுபிடியும் சூப்பரான காம்பினேஷன்.
கதாநாயகியைப் பற்றிச் சொல்வதனால் படத்தில் ரமேஷ் சுமார் பிகர்னு சொன்னே... ரொம்ப சுமாரான பிகர் போலிருக்கே! என்பார். நடிப்பைப் பொறுத்தவரையில் ரமேஷ் சொன்ன வசனம்தான் சரியான விமர்சனம்.

ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் யுவராஜின் பலமான ஏரியா! குறிப்பாக இரவுக் காட்சிகளில் நாடகத்தனம் இல்லாத ஒளிப்பதிவில் தனித்துத் தெரிகிறார் ஒளிப்பதிவாளர்.
ரொம்ப விளையாட்டாகக் கதை சொல்லிவிடக் கூடாதே என்று சட்டென்று சீரியஸாக மலையை உடைக்கும் அல்லையன்ஸ் கம்பெனியைக் கதைக்குள் கொண்டுவந்து தன் சமூக அக்கறையைக் காட்டியிருக்கிறார் இயக்குனர். அந்த அக்கறை காரணமாக அணிக்குள் வரும் ஊர் மக்களிடம் விளையாட்டில் அந்த உணர்வைக் கொண்டுவரத் தவறிவிட்டார்.

நம் இந்திய கிரிக்கெட் அணி போலத்தான் இயக்குனர் யுவராஜும்... பலவீனமான
பந்துவீச்சை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பேட்டிங் வரிசையில் பிரகாசிக்கும் (இங்கிலாந்து டூர் பற்றிச் சொல்லவில்லை) நம் அணியைப் போல பலவீனமான ஏரியாக்களை மறக்க வைத்து சிரிப்பு சிக்ஸர் அடித்திருக்கிறார்.