தினசரி செய்தித்தாளில் பார்த்துப் பழகிப் போன செய்திதான் படத்தின் ஒருவரிக் கதை! எதிர் எதிர் திசைகளில் பயணிக்கும் இரு பேருந்துகள் நேருக்கு நேராக மோதிக் கொள்ளும் விபத்தும் அதன் விளைவுகளும்தான் கதை! ஆனால், இனி விபத்து செய்திகளைப் படித்தால் உடனே தாண்டிச் செல்ல முடியாத அளவுக்கு பாதிப்பை உண்டாக்கியிருப்பதுதான் இந்தப் படத்தின் முக்கியமான அம்சம்!
தினமும் நாம் பார்க்கும் முகங்கள்தான்... ஊடலுக்குப் பின் சமாதானமாகி ஊருக்குச் செல்லும் காதல் ஜோடி, காதலியைத் தேடி வந்துவிட்டு ஊர் திரும்பும் காதலன் ஆகிய மூவரும் ஒரு பஸ்ஸில் திருச்சியில் இருந்து புறப்படுகிறார்கள். இன்னொருபக்கம் காதலனை எதிர்பார்த்துக் காத்திருந்துவிட்டு சென்னையில் இருந்து பஸ் ஏறுகிறாள் ஒரு காதலி. இந்த இரண்டு பஸ்களும் விழுப்புரத்தைத் தாண்டி மோதிக் கொள்கின்றன. காதல் ஜோடி என்ன ஆனது..? காதலன், காதலி சந்தித்தார்களா என்பதுதான் கதை!
முதல் காட்சியிலேயே மோதலைக் காட்டிவிட்டு, ஆறு மாதங்களுக்கு முன் என்று பின் கதைக்குச் சொல்கிறார் இயக்குனர். அதில் திருச்சியில் இருந்து சென்னைக்கு வரும் அனன்யா சூழல் காரணமாக சரவ்வுடன் பயணிக்க வேண்டிய நிலையும் அந்த இருவருக்குள்ளும் ஏற்படும் ரசாயன மாற்றங்களும் காட்சிகளாக விரிகின்றன. நிகழ்காலத்துக்கு வரும்போது சரவ் திருச்சியில் இருந்தும் அனன்யா சென்னையில் இருந்தும் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.
இன்னொருபக்கம் ஜெய் அஞ்சலி ஜோடி திருச்சியில் இருந்து பஸ் ஏறுகிறார்கள். அவர்களின் பின் கதையில் ஜெய் அப்பாவித்தனமாகவும் அஞ்சலி துடுக்கான துணிச்சலான பெண்ணாகவும் இருப்பது கதையின் சுவையைக் கூட்டுகிறது. அவர்களுக்குள் அறிமுகம் ஏற்படுவது, பல சோதனைகளைக் கடந்து ஜெய் காதலை அஞ்சலி ஏற்பது, அம்மாவிடம் அறிமுகம் செய்ய அழைத்துச் செல்வது என்று பயணிக்கிறது கதை.
இதற்கு நடுவே பிரியமான கணவன் மனைவி, வெளிநாட்டில் வேலை பார்த்து மகளை முதன்முதலாகப் பார்க்கச் செல்லும் தகப்பன், கண்களால் பேசி, கலந்து மொபைல் எண்களைப் பறிமாறிக் கொள்ளும் அளவுக்கு வளரும் பயணக் காதல் ஜோடி, வெற்றிக் கோப்பையோடு வரும் பெண் பிள்ளைகள் என்று பல முகங்கள் நான் பார்த்த ஆனால், மனதில் பதிய மறுத்தவை. இனி, அழுத்தமாகப் பதியும் அளவுக்கு மனதுக்கு நெருக்கமாக்கி இருக்கிறார் புதிய இயக்குனர் சரவணன்.
அவருக்கு முழு பலமாக இருப்பவர் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். அவர் காட்டும் கோணங்களும் அசைவுகளுமே ஆயிரம் கதைகளைச் சொல்கிறன. அதற்கு பக்கபலமாகப் பயணிக்கிறது இசை. புதியவர் சத்யா, பாடல்களிலும் பின்னணியிலும் முன்னணிக்கு வந்திருக்கிறார்.
கனமான க்ளைமாக்ஸ் என்றாலும் அதுவரையில் கலகலப்பாக நகர்த்திச் செல்லும் திரைக்கதை படத்துக்கு மிகப் பெரிய பலம். அதேபோல, பல இடங்களில் பளிச்சென்று இருக்கிறது வசனம். தமிழ் சினிமாவுக்கு நல்ல வரவாகச் சொல்லலாம் சரவணனை!
படத்தின் மைனஸாகச் சொல்வதாக இருந்தால் திரும்பத் திரும்ப வரும் சில காட்சிகளைச் சொல்லலாம்.
ஆசை மனைவியைப் பிரிய மனமில்லாமல் அவருடனே பயணிக்கும் கணவன் பஸ்ஸை விட்டு இறங்குவதும் மீண்டும் ஏறுவதும் அடிக்கடி வருவது கொஞ்சம் அலுப்பு. அதேபோல ஜெய் அஞ்சலி காட்சிகளின் நீளம்... சுவாரஸ்யம் என்றாலும் கதை நகராமல் இருப்பதால் கொஞ்சம் சலிப்பு வருகிறது.
மற்றபடி எங்கேயும் எப்போதும் நடக்கும் விபத்துதான் என்றாலும் தமிழ் சினிமாவில் இந்த விபத்து அடிக்கடி நடக்க வேண்டும்!
No comments:
Post a Comment
welcomeee