Friday, August 19, 2011

ரௌத்திரம்-பழகு என்ற தாத்தாவின் வார்த்தைகளை கடைசிவரை கடைபிடிக்கும் நாயகனின் கதை.


ரௌத்திரம் பழகு என்ற தாத்தாவின் வார்த்தைகளை கடைசிவரை கடைபிடிக்கும் நாயகனின் கதை. ஆனால், காலத்துக்கு ஏற்பவும் இடத்துக்கு ஏற்பவும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் போனால் ரௌத்திரம் ரவுடித்தனமாகிவிடும் என்பதைச் சொல்லாமல் விடுவதால் கதையில் ஈர்ப்பு குறைவாக இருக்கிறது.

அடிதடி நாயகனாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஆசைப்பட்டிருக்கும் ஜீவாவுக்கு கோ படத்துக்குப் பிறகு வந்திருக்கும் படம். குறும்பு கொப்பளிக்கும் நாயகனாக பல படங்
களில் வலம்வந்த ஜீவா இந்தப் படத்தில் அதிக வசனங்கள் பேசாமல் அடக்கி வாசித்திருக்கிறார். அநியாயத்தைக் கண்ட இடத்தில் தட்டிக் கேட்கும் கேரக்டர். அதனால், குடும்பத்துக்கு சிக்கல் என்று வரும்போது வீட்டை விட்டு வெளியேறுகிறார். அந்த இடத்தில் அவருடைய நடிப்பில் அபாரமான அழுத்தம்! ஆனால், க்ளைமாக்ஸில் வெறுமனே வேடிக்கை பார்க்கும் நபராக மாறிப் போனதால் அதுவரையில்  செய்த அத்தனையும் அடிபட்டுப் போகிறது. நடிப்பென்றால் நிச்சயம் ஜீவாவுக்கு வித்தியாசமான படம்தான்!

படத்தில் கவரும் இன்னொரு கதாபாத்திரம் ஜீவாவின் அப்பாவாக வரும் ஜெயபிரகாஷ். அப்பாவின் பெயர் வைத்திருப்பதால் ஜீவாவை பெயர் சொல்லி அழைக்காமல் அவர் இவர் என்று மரியாதையாக அழைப்பதும் முகம் பார்த்துகூட பேசாமல் அப்பாவுக்கு உரிய மரியாதையை மகனுக்குக் கொடுப்பதும், ஜீவா சென்ற பிறகு அங்கலாய்ப்பதும் அசத்தல்!
கொஞ்சநேரமே வந்தாலும் ஜீவாவின் தாத்தாவாக வரும் பிரகாஷ் ராஜ் கேரக்டரைப் போலவே கம்பீரம்!

படத்தின் மிகப் பெரிய பலவீனம் திரைக்கதை! இடைவேளை வரையில் கௌரி... கௌரி என்று பில்ட் அப் கொடுத்துவிட்டு இடைவேளையின் போது அவரைக் காட்டுகிறார்கள். மெலிந்த தேகமும் நோஞ்சான் தோற்றமுமாக இருக்கும் சென்றாயந்தான் வில்லன் என்னும்போது சப்பென்று ஆகிவிடுகிறது. ஆள்தான் அப்படி என்றால் ஜீவாவிடம் சும்மா சும்மா அடிவாங்கிக் கொண்டே இருக்கிறார். கடைசியில் யார் கையிலோ அடிபட்டு செத்துப் போகிறார். மிக பலவீனமான கேரக்டரைசேஷன்... ஆனால், சின்னச் சின்ன முக பாவனைகளில் சென்றாயன் அசத்துகிறார். கதாபாத்திரம் வலுவாக இருந்திருந்தால் நிச்சயம் தூக்கி சுமந்திருப்பார் என்று நம்ப வைக்கும் நடிப்பு. அது சரியில்லாததால் வீணாகிவிட்டது!

மனதில் நிற்காத இசை! பின்னணியிலும் ஈர்க்கவில்லை.

இயக்குனருக்கு இது முதல் படம்... சின்னச் சின்ன விஷயங்களுக்கு கூட மிக நுணுக்கமான டீடெய்ல் செய்து காட்சிகளைச் சுவையாகப் படைத்திருக்கிறார். ஆனால், கோர்வையாக இல்லாததால் சுவை முழுமையாகக் கிடைக்கவில்லை. நல்ல இயக்குனராக வருவார் என்பதற்கான அடையாளங்கள் தெரிகின்றன. அடுத்தப் படத்தில் அதை எதிர்பார்ப்போம்!

No comments:

Post a Comment

welcomeee