Tuesday, November 29, 2011

மயக்கம் என்ன- ஒற்றை ஆளாக மொத்தப் படத்தையும் தலையில் தூக்கிச் சுமக்கிறார் தனுஷ்


ரு வெற்றி, ஓர் அங்கீகாரம்... அதற்காக ஏங்கும் ஒருவனைப் பற்றிய கதை என்ற அதே 7 ஜி ரெயின்போ காலனி கதை ஒன் லைனில் வேறொரு பாணியில் எடுத்திருக்கிறார் செல்வராகவன். ஆனால், தனுஷின் உழைப்பு இந்தப் படத்தை வேறொரு தளத்துக்குக் கொண்டு செல்கிறது.
அமெச்சூர் போட்டோகிராபரான தனுஷுக்கு கனவு மிகப் பெரிய போட்டோகிராபராவதுதான். அவருடைய ஆண்-பெண் நட்பு வட்டத்துக்குள் ஒரு நண்பனின் கேர்ள் பிரெண்டாக நுழைகிறார் ரிச்சா. ஆரம்பத்தில் எலியும் பூனையுமாக இருக்கும் இருவருக்குள்ளும் ஒரு கெமிஸ்ட்ரி ஓடுகிறது. ஒரு கட்டத்தில் அது காதலாக, நட்புக்கு துரோகம் செய்வதாக எண்ணி மறுக்குகிறார் தனுஷ். இதற்கிடையே அவர் எடுத்தப் போட்டோ ஒன்றை தன்னுடையது என்று சொல்லி பேர் வாங்கிவிடுகிறார் ஒரு பிரபல போட்டோகிராபர். தனுஷின் காதல் என்னவானது... தன் துறையில் தனுஷ் ஜெயித்தாரா என்பதே மீதிக் கதை!
ஒற்றை ஆளாக மொத்தப் படத்தையும் தலையில் தூக்கிச் சுமக்கிறார் தனுஷ். ஆரம்பத்தில் விளையாட்டுத் தனமாக அலையும்போதும் அவமானங்களை மென்று விழுங்கிக் கொண்டு அங்கீகாரத்துக்காக அல்லாடும்போதும் தனுஷின் உழைப்பு அபாரமாக இருக்கிறது. காதலை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு தவிக்கும் காட்சிகளில் கண்களில் தெரிகிறது அவருடைய உணர்வுகள்! அதேபோல, கால ஓட்டத்தின் மாற்றங்களை அழகாகப் பிரதிபலிக்கிறார்.
ரிச்சாவுக்கு கரிய பெரிய கண்கள்... அதிலேயே ஆயிரம் பக்க வசனங்களைப் பேசிவிடுகிறார். தனுஷுக்கு இணையாக நடிக்க ஸ்கோப் உள்ள கேரக்டர்... அழகாகச் செய்திருக்கிறார்.
தனுஷின் நண்பர்கள் வட்டம் இயல்பாக இருக்கிறது. ரிச்சாவை கேர்ள் பிரெண்டாக நினைத்து பழகி ஏமாந்து நிற்கும் நண்பன் செம ஃபிட்!
படத்தின் இன்னொரு ஹீரோ ஜி.வி.பிரகாஷ் குமார். பாடல்களில் ஏற்கனவே ஹிட் அடித்துவிட்ட ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையில் கவனிக்க வைக்கிறார். அதிலும் மவுனமாக நிற்கும் பல இடங்களில் ஆயிரம் அர்த்தங்கள் தொனிக்கிறது. வெல்டன் பிரகாஷ்!
கதையே போட்டோகிராபரைப் பற்றியது என்பதால் கேமரா மிரட்டுகிறது. இயற்கைக் காட்சிகளாக விரியும் பல இடங்கள் நிஜமான பெயிண்டிங் உணர்வு! ராம்ஜி நூறு சதவிகிதம் உழைத்திருக்கிறார்.
செல்வராகவன் 
நேர்கோட்டில் கதை சொல்ல ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் சினிமா ரசிகனுக்கான தேவைகளுக்காக முன்பாதியில் பல கலகலப்பு எபிசோட்களைச் சேர்த்துவிட்டார். அதனாலேயே சீரியஸாகச் செல்லும் இரண்டாவது பாதி மெதுவாகத் தோன்றுகிறது. காட்சிகள் வேறாக இருந்தாலும் தனுஷ், ரிச்சா இருவருக்குமான உறவும் பிணக்கும்தான் சொல்லப்படுகிறது என்பதால் கொஞ்சம் அலுப்பு தட்டுகிறது. அதனாலேயே ரசிகர்கள் படத்தோடு ஒன்றாமல் தவிக்கிறார்கள்.  இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியிருந்தால் செல்வராகவன் இன்னும் அசத்தியிருக்கலாம்!

No comments:

Post a Comment

welcomeee