Tuesday, November 1, 2011

வேலாயுதம் உண்மையிலேயே அதிரடி மசாலாதான்!


நடிகர்கள்: விஜய்,ஜெனிலியா,ஹன்சிகா மோத்வானி,சந்தானம் மற்றும் பலர்
இசை    : விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு    : பிரியன்
இயக்கம்      : ஜெயம் ராஜா


நீண்டநாட்களாக ஒரு அதிரிபுதிரி வெற்றிக்காகக் காத்திருக்கும் விஜய் நடித்திருக்கும் படம். அரசியல், அடுத்தடுத்த பிரச்னைகள் என்று சிக்கித் தவித்துக் கொண்டிருந்த விஜய்க்கு உடனடி ரிலீஃபாக வந்திருக்கும் வேலாயுதம் உண்மையிலேயே அதிரடி மசாலாதான்!

பல ஆண்டுகளுக்கு முன்பே ப.திருப்பதிசாமி கதை திரைக்கதை இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆசாத் படத்தின் கதையை ஆதாரமாகக் கொண்டு வேலாயுதத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜா.

தமிழகத்தை அழிக்க நினைக்கும் அந்நிய சக்திகள் அதற்காக உள்துறை அமைச்சரின் உதவியோடு சென்னையில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகளை நிகழ்த்த திட்டமிடுகிறார்கள். அதன்படி பள்ளிக்கூட பஸ்ஸில் முதல் குண்டு வெடிக்கவும் செய்கிறது. சென்னையில் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளராக இருக்கும் ஜெனிலியா இந்த கும்பலின் அராஜக வேலை ஒன்றை துப்பறிய அவரைக் குத்திக் கிழிக்கிறார்கள் மூன்று அடியாட்கள். ஜெனிலியாவிடம் அடுத்த வெள்ளியன்று இன்னொரு குண்டு வெடிக்கும் என்ற தகவலையும் சவடாலாகச் சொல்கிறார்கள். அவர்கள் செல்லும் காரில் இருக்கும் பெட்ரோல் பைகள் வெடிக்க, மூவரும் இறக்கிறார்கள். கத்திக்குத்து காயத்தோடு கிடக்கும் ஜெனிலியா ஒரு பேப்பரில் வெள்ளிக்கிழமை நடக்கப் போகும் குண்டு வெடிப்பைத் தடுப்பேன்... எதிரிகள் தப்ப முடியாது என்று எழுதி கீழே வேலாயுதம் என்று எழுதி வைக்கிறார். யார் அந்த வேலாயுதம் என்ற பரபரப்பு எழுகிறது.

பவுனூர் என்ற கிராமத்தில் அண்ணன் தங்கை பாசத்துக்கு இலக்கணமாக இருக்கும் விஜயும் சரண்யா மோகனும் சென்னைக்கு ரயில் ஏறுகிறார்கள். விஜய் பெயர் வேலாயுதம். மாமா, அத்தை, மாமா மகள், நண்பர்கள் சகிதம் சென்னை வந்து இறங்கும் விஜய், தங்கையின் பையைத் திருடும் திருடனைப் பிடிக்க பார்சலில் வந்த பைக்கை எடுத்துக் கொண்டு துரத்துகிறார். விஜயைத் துரத்தும் போலீஸ்காரர் விஜயிடம் பேர் கேட்க, வேலாயுதம் என்று சொல்கிறார். ஸ்டேஷனுக்கு வெளியே கொண்டு விடப்பட்ட பைக் வெடிக்கிறது. வேலாயுதம் புகழ் மேலும் அதிகமாகிறது. அடுத்தடுத்து இதுபோன்ற தற்செயல் சம்பவங்கள் நடக்கின்றன. வில்லன் குரூப் குழப்பமாகிறார்கள். விஷயம் தெரிந்த ஜெனிலியா விஜயை வேலாயுதமாக்க திட்டமிடுகிறார். விஜய் மறுக்கிறார்.

இதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்பதைத் தெரியாமல் இருக்க நீங்க்ள் ஒன்றும் பச்சைக்குழந்தை இல்லை என்பதால் இதற்கு மேல் கதை வேண்டாம்!

வேலாயுதமாக விஜய் வெளுத்துக் கட்டியிருக்கிறார். தங்கை பாசத்தைப் பொழியும் கிராமத்து காட்சிகளில் காமடியில் பின்னி எடுக்கிறார். சண்டைக் காட்சிகளில் அனல் பறத்துகிறார். பாடல் காட்சிகளில் சுழன்று ஆடுகிறார். எமோஷனலாக காட்சிகளில்தான் கொஞ்சம் தடுமாறுகிறார். ஆனால், தன் பலம் என்ன என்பதைத் தெரிந்து விளையாடியிருக்கும் விஜய்க்கு இந்தப் படம் ஒரு மைல் கல்தான்!

ஒன்றுக்கு இரண்டாக நாயகிகள்... ஜெனிலியாவுக்கு கொஞ்சம் கதையோடு ஒட்டிய கேரக்டர்... அதனால் நடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ஹான்சிகா மொத்வானிக்கு பாடல் காட்சிகளில் மட்டுமே வேலை... படத்தில் விஜய் பேசும் பஞ்ச் டயலாக் ஒன்று... நான் சும்மாவே காட்டுவேன்... நீ காட்டு காட்டுனு கேட்டா... என்ன பண்றது என்று இருக்கிறது. அது ஹான்சிகா மொத்வானிக்குத்தான் ரொம்பப் பொருத்தம்... சும்மா காட்டு காட்டு என்று காட்டுகிறார்! வெண்ணெய் போல இருக்குது பொண்ணுங்கற வசனத்தை ரொம்ப நாளைக்கு பேசமுடியாது அம்மணி... கொஞ்சம் நடிக்க ஆரம்பிச்சுடுங்க!

காமடிக்கு குத்தகை சந்தானம்... விஜயோடு சேர்ந்திருக்கும் போதும் தனியாவர்த்தனம் செய்யும்போதும் நன்றாகவே சிரிக்க வைக்கிறார். திருடனாக மாறுவதற்கு அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அம்பேல் ஆகும்போது சிரிப்பு பீறிடுகிறது. வசனங்களில் கவுண்டமணி வாரிசாகவே மாறிவிட்டார். செம கலாய்ப்பு!

அந்நிய சக்திகளாக வரும் வில்லன்கள்தான் ஒட்டவே இல்லை... உள்ளூர் உள்துறை அமைச்சருக்குக் கூட தெரியாத முகம் வருவது ஒட்டாமல் போகிறது. வில்லன் சரியில்லாததால் ஹீரோயிசமும் கொஞ்சம் வீக் ஆகிறது. ஆனால், அதை உணராத அளவுக்கு எமோஷனலாக இருக்கும் காட்சிகளால் கொஞ்சம் தப்பிக்கிறது.

சரண்யா மோகன், சாயாஜி ஷிண்டே, எம்.எஸ். பாஸ்கர், சூரி, இளவரசு, ராகவ் என்று பெரிய பட்டியலாக இருந்தாலும் எல்லோருடைய கேரக்டர்களும் மனதில் நிற்கும் வகையில் கதையை நகர்த்தியிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.

இசை விஜய் ஆண்டனி... வழக்கம்போல குத்துப் பாடல்களால் கும்மாளம் போட்டிருக்கிறார்... விஜய் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் துள்ளல் இசை! ஆனால், வெரைட்டி மிஸ்ஸிங்!

வசனம் சுபா... ஒரு மசாலா படத்துக்கு என்ன அளவு தேவையோ அந்த அளவு இருக்கிறது. வெல்டன்! அதிலும் கூரைமீது விஜய் ஓடும்போது ஓடு சரிந்து கீழே பேசும் கட்சிக்காரரின் தலையில் விழுகிறது. இது எதிர்கட்சிக்காரர்களின் சதி என்று அவர் குற்றம் சாட்ட விஜய் உடனே, நல்லவேளை நான் ஆளுங்கட்சி என்று டைமிங்கில் சொல்வது ஜர்னலிஸ்டிக் டச்! அதேபோல், வில்லனை மடக்கும் போலீஸ் காரர் முஸ்லீம் என்று தெரிந்ததும் அவன் நான் நீங்க நல்லாயிருக்கணும்னும் சேர்த்துதான் போராடுறேன் என்று சொல்ல பதிலுக்கு அந்த போலீஸ் அதிகாரி, நாங்க நல்லாத்தான் இருக்கோம்... உங்களுக்கு புடிச்சவனா இருந்தாலும் பின்லேடனை உங்களால் பாதுகாக்க முடியலை... எங்களுக்கு புடிக்கலைன்னாலும் கசாப்பை நாங்க பத்திரமாகத்தான் பாத்துக்கறோம் என்று பொலிடிகலாகவும் பஞ்ச் அடிக்கிறார்கள் வசன இரட்டையர்கள்!

மாஸ் படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கும் சர்வ இலக்கணங்களோடு நூறு சதவிகிதம் பொருந்திப் போகிற திரைக்கதையை அமைத்திருக்கும் எம்.ராஜாவுக்கு இது மிக முக்கியமான படம். கொஞ்சம் அளவு மிஞ்சியிருந்தாலும் அலுப்பு தட்டாத வகையில் விஜய் ரசிகர்களுக்கு விருந்தே படைத்திருக்கிறார்.

இந்த தீபாவளியில் வேலாயுதம் தவுசண்ட் வாலா பட்டாசாக வெடித்திருக்கிறது!

 

No comments:

Post a Comment

welcomeee